காட்டுத்தீ என்பது, எரியக்கூடிய தாவரங்களைக் கொண்ட காட்டுப் பகுதிகளில் அல்லது நாட்டுப்புறப் பகுதிகளில் கட்டுக்கு அடங்காமல் எரியும் தீயைக் குறிக்கும். இதன் பெரிய அளவு; தொடங்கிய இடத்திலிருந்து பரவிச் செல்லும் வேகம்; எதிர்பாராமல் திசை மாறக்கூடிய தன்மை; சாலைகள், ஆறுகள் போன்ற இடைவெளிகளைக் கடந்து செல்லும் திறன் என்பவை காட்டுத்தீயைப் பிற தீ வகைகளில் இருந்து வேறு படுத்துகின்றன. தீப்பிடித்தலுக்கான காரணம், பரவும் வேகம் போன்ற அதன் இயற்பியல் தன்மைகள், அங்குள்ள எரியக்கூடிய பொருட்கள், எரிதலில் தட்பவெப்பநிலைகளின் தாக்கம் என்பவற்றின் அடிப்படையில் காட்டுத்தீயின் தன்மைகள் வரையறுக்கப்படுகின்றன.


அன்டார்ட்டிக்கா தவிர்ந்த, உலகின் எல்லாக் கண்டங்களிலும் காட்டுத்தீ ஏற்படுகிறது. காலத்துக்குக் காலம் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. புதைபடிவங்களும், உலக வரலாறும் காட்டுத்தீ பற்றிய பல தகவல்களைத் தருகின்றன. காட்டுத்தீ பாரிய உயிர்ச் சேதங்களையும், பொருட் சேதங்களையும் ஏற்படுத்த வல்லது. எனினும், சில தாவரங்கள் காட்டுத்தீயால் நன்மையடைவதும் தெரிய வருகிறது. சில இனத்தாவரங்கள், அவற்றின் வளர்ச்சிக்கும், இனப்பெருக்கத்துக்கும் காட்டுத்தீயில் தங்கியுள்ளன. பெரிய காட்டுத்தீக்கள் சூழலில் எதிர்மறையான தாக்கங்களை உண்டாக்குகின்றன.
காட்டுத்தீயைத் தடுப்பதற்கும், கண்டுபிடிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்குமான உத்திகள் காலத்துக்குக் காலம் மாறுபடுகின்றன. பன்னாட்டுக் காட்டுத்தீ மேலாண்மை வல்லுனர்கள் இது குறித்த ஆய்வுகளையும், தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் ஊக்குவித்து வருகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு: https://ta.wikipedia.org/wiki/காட்டுத்தீ
Comments
Post a Comment