வில்லுப்பாட்டு என்பது தமிழர் கலை வடிவங்களில் ஒன்றாகும். வில்லின் துணைகொண்டு பாடப்படும் பாட்டு வில்லுப்பாட்டு எனப் பெயர் பெற்றது. துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. துணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை: உடுக்கை, குடம், தாளம், கட்டை என்பனவாகும்.
மனிதன் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்த நேரம் அவனுக்கு உதவியது வில்லாகும். அதில் கட்டப்பட்டிருந்த மணி ஓசையில் மயங்கி அதனடிப்படையில் வில்லுப்பாட்டிசை உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
வீரர்களின் பொழுதுபோக்குச் சாதனமாக முதலில் விளங்கிய வில்லுப்பாட்டு, காலப்போக்கில் வளர்ச்சி பெற்று மக்களின் பொழுது போக்கிற்காகவும், குறிப்பாகச் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை சொல்வதற்கும் பயன்பட்டது.
‘’’வில்லுப்பாட்டு’’’ எப்படி உருவானது என்பதற்கு செவிவழிக்கதை ஒன்று உண்டு. பாண்டிய மன்னர் வில்லுடன் வேட்டைக்குப் போனார். பல விலங்குகளை வேட்டையாடினார். மாலை நேரம் வந்ததும், மன்னர் மனதில் கலக்கம். அமைச்சரிடம் ‘’இந்த உயிர்களை இப்படிக் கொல்லுகிறோமே... நமக்கு சந்தோஷம், அவற்றுக்கோ துன்பம். மானைக் கொன்ற பின், அதன் குட்டி எப்படித் தவிக்கிறது பார்த்தீர்களா?’’ என்றார். ‘’சரி, இதற்கெல்லாம் பரிகாரம் உண்டா?’’ ‘’உண்டு ராஜா... இறைவன் மீது மனமுருகப் பாடி பாவ மன்னிப்புக் கோருங்கள். இசை ஒன்றுக்குத் தான் இசைவான்’’ என்றார் அமைச்சர். உடனே காட்டிலேயே கச்சேரி நடத்த முடிவானது. ஆனால் பக்க வாத்தியங்கள் இல்லை. கொண்டு வந்த பொருட்களை இசைக்கருவிகளாக்கினர். வில்லைத் தரையில் வைத்து அம்பால் தட்டி இசை எழுப்பினார் மன்னர். அப்படி தட்டும் போது வில் சரிவர நிற்காத்தால். தண்ணீர் கொண்டு போயிருந்த மண் குடத்தைக் கட்டித் தட்டினார். டும் டும் என்று நாதம் பிறந்துவிட்டது. ராஜா பாட்த் துவங்கும் முன், ‘தந்தனத்தோம்’ என்று அடியெடுத்துக் கொடுத்தார் அமைச்சர். மன்னர் பாடும் போது, ஆமோதிக்க வேண்டாமா? அதனால் மன்னரின் உதவியாட்கள் ‘ஆமாம்’ போட ஆரம்பித்தனர். அந்தப் பழக்கம் வில்லுப்பாட்டில் இன்னும் தொடர்கிறது.
மேலும் படிக்க:https://ta.wikipedia.org/wiki/வில்லுப்பாட்டு
மேலும் படிக்க:https://ta.wikipedia.org/wiki/வில்லுப்பாட்டு
Comments
Post a Comment