2050-ல் இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, டான்சேனியா, இந்தோனேசியா, எகிப்து, அமெரிக்கா ஆகிய ஒன்பது நாடுகளில் மட்டும் உலகின் பாதி மக்கள் வசிப்பர்.
மக்கள் தொகையில் இந்தியா 2027-ல் சீனாவை மிஞ்சும் என்று ஐக்கிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 முதல் 2050-க்குள் இந்தியாவின் மக்கள் தொகை 273 மில்லியன் அதிகரிக்கும் என்றும் ஐ.நா. கணித்துள்ளது.
சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து சிந்திக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், ’தி வெர்ல்ட் பாபுலேஷன் ப்ராஸ்பெக்ட்ஸ் 2019: ஹைலைட்ஸ்’ என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறையின் மக்கள் தொகை பிரிவு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, உலகெங்கிலும் அடுத்த 30 ஆண்டுகளில் மக்கள் தொகை 2 பில்லியன் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது, தற்போதைய 7.7 பில்லியனில் இருந்து 2050-ல் 9.7 பில்லியனாக உலக மக்கள் தொகை அதிகரித்திருக்கும். இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகில் 11 பில்லியன் மக்கள் வசிப்பர்.
2050-ல் இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, டான்சானியா, இந்தோனேசியா, எகிப்து, அமெரிக்கா ஆகிய ஒன்பது நாடுகளில் மட்டும் உலகின் பாதி மக்கள் வசிப்பர்.
பிறப்பு விகிதம் குறைந்து வருவதாலும், மனிதனின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்து வருவதாலும், மக்கள் தொகை குறைந்து வரும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் உலகில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2050-ல் ஆறு பேரில் ஒருவருக்கு 65 வயது கடந்திருக்கும் (16 %). இது, 2019-ல் பதினோரு பேரில் ஒருவர் (9 %) என்ற விகிதத்தில் உள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டோர் 2019-ஐ (143 மில்லியன்) காட்டிலும் 2050-ல் (426 மில்லியன்) மும்மடங்கு அதிகம் இருப்பர்.
”மக்கள் தொகை அதிகரித்து வரும் நாடுகளின் பட்டியலில் ஏழை நாடுகளே அதிகம் உள்ளன. இதனால் வருமை ஒழிப்பு, சமத்துவம், பசி, ஊட்டச்சத்து குறைபாடு, கல்வி மற்றும் சுகாதாரம் சார்ந்த விடயங்களை மேம்படுத்துவது பெரும் சவாலாக இருக்கும். யாரும் விடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்,” என்று ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறைக்கான கீழ்ப் பொதுச் செயலர் லியூ சென்மின் எச்சரித்துள்ளார்.

Comments
Post a Comment